search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலில் நஷ்டம்"

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜவுளிக் கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்னமுத்து, 3-வது வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுகுணா தேவி.

    பாலமுருகன் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஜவுளி தொழிலில் பாலமுருகனுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பாலமுருகன் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாலமுருகன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு வந்து உள்ளார். பின்னர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வி‌ஷத்தை குடித்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் அருகே தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமையா? இருக்குமோ என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல்:

    இரணியல் அருகே கண்டன் விளை வலியவீடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெப்ரின் ஜோஸ் (வயது 34).

    இவருக்கு பேபி லிசா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். தொழில் அதிபரான ஜெப்ரின் ஜோஸ் அந்த பகுதியில் ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற் சாலை நடத்தி வந்தார்.

    நேற்று காலை அவர், வழக்கம்போல வீட்டில் இருந்து புறப்பட்டு தனது தொழிற்சாலைக்கு சென்றார்.

    அந்த தொழிற்சாலையில் உள்ள தனது அறைக்கு சென்று பணிகளை ஜெப்ரின் ஜோஸ் கவனித்து வந்தார். பகல் நேரத்தில் அவரது அறைக்கு சென்ற ஊழியர்கள் ஜெப்ரின் ஜோஸ் வி‌ஷம் குடித்த நிலையில் அறையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக ஊழியர்களும், உறவினர்களும் சேர்ந்து அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெப்ரின் ஜோஸ் இறந்து விட்டார்.

    இதுபற்றி அவரது மனைவி பேபி லிசா இரணியல் போலீசில் புகார் செய்தார். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    போலீசார் விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஜெப்ரின் ஜோஸ் கடன் வாங்கியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனவேதனையில் அவர், தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. கந்து வட்டி கொடுமை காரணமாக தொழில் அதிபர் ஜெப்ரின் ஜோஸ் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அதுபற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதப்பாண்டி அருகே போதிய வருமானம் கிடைக்காததால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் துணிக்கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்கலை:

    பூதப்பாண்டியை அடுத்த அழகியபாண்டியபுரம் செம்பாவிளை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் அழகியபாண்டி புரத்தில் துணிக்கடை ஒன்று நடத்தி வந்தார். இந்த நிலையில் துணிக்கடையில் இருந்து போதிய வருமானம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மன வேதனையுடன் காணப்பட்டு வந்த அலெக்ஸ் நேற்று இரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தக்கலையை அடுத்த பிலாங்கால் செங்கல் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). தொழிலாளி. இவரது மனைவி பூதங்கம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். ராஜ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவரது மகள் வீட்டிற்கு வந்தார். வீடு திறக்கப்படாமல் பூட்டி கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் அறையில் ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலத்தில் 2-வது மனைவி வீட்டில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    பேரையூர்:

    திருமங்கலம் கணபதி நகரைச் சேர்ந்தவர் அயூப்கான் (வயது 48), இரும்பு வியாபாரி. இவருக்கு ஹரினா பேகம், பரக்கத் நிஷா என 2 மனைவிகளும், 3 மகன்களும் உள்ளனர்.

    2 மனைவிகளும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று பரக்கத் நிஷா, கோரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

    இன்று காலை அவர் வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்த பரக்கத் நிஷா, அங்கு கணவர் அயூப்கான் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடந்த சில நாட்களாக அயூப்கான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை பொழிச்சலூர் பாரதி தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தீன். மீன் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கினார்கள். இதனால் காஜா மொய்தீன் அவதிப்பட்டார்.

    மனம் உடைந்த காஜா மொய்தீன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று இரவு காஜா மொய்தீன், அவரது மனைவி சர்மிளா (30), மகள் பர்தானா (12), மகன் முகமது ஆசிப் (8) ஆகிய 4 பேரும் உணவில் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்து உயிருக்கு போராடினார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குடும்பத்துடன் வி‌ஷம் கலந்து உணவை சாப்பிட்டு விட்டதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறினார்கள்.

    அக்கம் பக்கத்தினர் இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் ஆப்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் கணவன்-மனைவி இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும், 2 குழந்தைகளும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×